Friday, November 5, 2010

54 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் போலீசாரினால் தீவைப்பு. கிண்ணியாவில் சம்பவம்


கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கிண்ணியாவிலுள்ள கண்டால் காடு என்ற ஊரில் 54 முஸ்லிம் வீடுகள் ( ஒலைகுடிஷைகள் ) போலீசாரினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக lankaenews.com என்ற இனைய்யதளம் செய்திவெளியிட்டுள்ளது.

எரிக்கப்பட்டநிலையில் உள்ளவீடுகளும், அதற்கு அருகாமையில் வீட்டை இழந்து தனது பொதிகளுடனும், குடும்பத்தாருடனும் அமர்திருக்கும் மக்களின் புகைப்படம்கள்

Friday, August 6, 2010

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். நோன்புஎன்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்புவிதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)

மேற்படி வசனம், “நோன்புஎன்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.

-1- உடல் இச்சை.
-2-
கோபம்.
-3-
தவறான உணவு முறை.
-4-
தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.

மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.

இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.

உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.

நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.

இளைஞர்களே!
திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)

இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.

நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் நான் நோன்பாளி!எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.

உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.

மனிதன் பேசும் மிருகம்என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் பொய்என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.

நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.

மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.

நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான்பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.

இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. பிச்சைக்காரர்கள்என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)

சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்புஎன்பது வரவேற்கத் தக்க அம்சமே!

அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்புநடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ஃபித்றாவின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.

எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.

மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.

மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.

ரமழான் மாதம்என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.

எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.

எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!

Sunday, July 25, 2010

பணிப்பெண்களாக வேலை செய்வோரில் 45 % மாணவர்கள் முஸ்லிம் பெண்களாக இருப்பது கவலைக்குரியது.

"இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் 85 % மானோரில் 45 % மாணவர்கள் முஸ்லிம் பெண்கள் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது, இது அனைவரும் கவலைதரக்கூடிய விடயமாகும்" இவ்வாறு முஸ்லிம்கள் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மீரா மொஹிடீன் கண்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, July 18, 2010

ஹிஜாப் அணிந்ததால் பள்ளியில் இருந்து மாணவி நீக்கம்! எதிர்த்து தொடுத்த வழக்கில் வெற்றி!

முஸ்லிம் பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக டி.ஸி (Transfer Certificate) கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நடந்தது பிரான்ஸிலோ அல்லது டென்மார்க்கிலோ அல்ல. கேரளாவின் ஆலப்புழாவில் தான்.


இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கிற்கு எதிரொலியாக, பள்ளியின் பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்யுமாறு கடந்த சனிக்கிழமை, 05-06-2010 அன்று அழைப்பாணை (சம்மன்) அனுப்பி, கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றின் பிரின்ஸிபலாகப் பணிபுரியும் மேரி ஜெஸிண்டா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேரி ஜெஸிண்டா எதிர்வரும் ஜுலை 31 ந்தேதிக்குள் நீதிமன்றத்திற்கு ஆஜர் ஆகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதன்மை நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிபதியான முஹம்மத் வஸீன், இது தொடர்பான அழைப்பாணையைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன், நபலா என்ற பத்தாம் வகுப்புப் பயிலும் முஸ்லிம் மாணவி, தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்தால் டி.ஸி கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு "பள்ளியின் சீருடைக்கு இது முரணாக உள்ளது" என்ற காரணம் காட்டப்பட்டது.

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு முடியும் வரையிலாவது தனது மகளைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பள்ளி நிர்வாகம் கறாராக மறுத்து விட்டது என்கிறார் மாணவி நபலாவின் தந்தை நஜீர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவி நபலாவின் தந்தை நஜீர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததை அடுத்து நடைபெற்ற தொடர் விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு இ.பி.கோ 504 (அமைதியைக் குலைக்கும்படியான அவமதிப்பைச் செய்தல்) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் பிரின்ஸிபலை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இவ்விஷயம் அதிக சர்ச்சைக்கு உள்ளானதால், தீர்வு காணும் பொருட்டு மாவட்ட ஆட்சியாளர் பி. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் கடந்த மாதம், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்தபிறகு, மாணவி நபலாவை மீண்டும் தமது பள்ளியில் இணைந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை நிராகரித்துள்ள மாணவி நபலா தற்போது வேறு பள்ளியில் பயின்று வருகிறார்.

Tuesday, July 13, 2010

ஓட்டுனர்கள் கவனத்திற்கு

எந்த வேலையாக இருந்தாலும் கவனத்தை அதில் ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும்போது அருகிலிருப்பவர்கள் வளவளவென்று பேச நாம் அனுமதிப்பதில்லை. தொலைபேசியில் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கீடுகள் வருவதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், வண்டி ஓட்டும்போது மட்டும் எது வேண்டுமானாலும் நமது கவனத்தைச்
சிதறடிக்க அனுமதிக்கிறோம். இது தவறு.

இதுவரையில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் திறமையாக வண்டி ஓட்டியிருப்பதாக நாம் நினைக்கலாம். அந்த நினைப்பை அப்படியே விட்டுவிடுவோம். எத்தனையோ சின்னச்சின்ன நிகழ்வுகள் ஒரேயடியாக நமது கவனத்தைத் திருப்பிவிடவும், அதனால் உண்டாகும் தவறுகள் விபத்தில்
கொண்டுவிடவும் வாய்ப்புகள் உண்டு.

சாதாரணமாக நிகழக்கூடிய சில தவறுகள்.

1. வண்டி ஓட்டும் போது குளிர்பானம் குடிக்கிறோம். எதோ ஒரு சமயத்தில் அது உடையில் சிந்திவிட்டால், அனிச்சையாக நாம் கையை உதறக்கூடும். சட்டென்று கவனம் பாதையிலிருந்து விலகி கறைபடிந்த உடையின் மேல் செல்லக்கூடும். அந்த நேரத்தில், முன்னே மிகவும் நெருக்கமாக வண்டிகள் எதுவும் இருந்தால்?

2. நெரிசலான பகுதியில் வண்டி ஓட்டிச் செல்கிறோம். கைத்தொலைபேசி அழைக்கிறது. ஒரு கையில் தொலைபேசியும், மறு கையில் செலுத்து வளையுமாக (ஸ்டீரிங்), மொத்த போக்குவரத்திற்கும் இடைஞ்சலை உண்டாக்குகிறோம்.

3. நெடுஞ்சாலைகளில் போகும்போது குழந்தைகளுடன் சாதாரணமாக விளையாடிக்கொண்டே செல்கிறோம். சிறிய கவனச் சிதறலும், நூற்று இருபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வண்டிக்கு எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

4. அருகில் அமர்ந்திருப்பவருடன் பேசிக்கொண்டே செல்வது நமக்கு மிகவும் சாதாரணமான ஒன்று. ஊரில் பேருந்து ஓட்டுபவர் எப்பொழுதாவது வளவளவெனப் பேசினால் ஒத்துக்கொள்கிறோமா? “ரோட்டை பாத்து ஓட்டுங்கஎன்று கட்டளை இடுகிறோம். ஆனால், நாம் மட்டும் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறோம். பேசுவது தவறில்லைதான்; அந்தப் பேச்சு உணர்வுகளைத் தூண்டி நமது கவனத்தை சிதறடிக்காத வரையில்.

5. புகை பிடிப்பதே தவறு. வண்டி ஓட்டும்போது புகைப்பது தவறிலும் தவறு.

6. எதாவது ஈயோ கொசுவோ வந்தால் உடனே அதை விரட்டுவதில் கவனம் செலுத்தக் கூடாது.

7. ஒலிநாடாவோ, வானொலியோ எதுவாக இருந்தாலும் ஓரளவிற்கு மேல் சத்தத்தை வைத்துக் கேட்பதாலும் கவனம் சிதற வாய்ப்பு இருக்கிறது.

கவனிக்க:
இவற்றை நாம் சாதாரணமாக தினசரி செய்துகொண்டுதான் இருக்கிறோம். இதுவரையில் எதுவும் நிகழவில்லையென்பதால் இனியும் இதனைத் தொடர்ந்து செய்வது நமக்கு நாமே அபாயத்தைத் தேடிக்கொள்வதாகும். வண்டி ஓட்டும்போது முழுக்கவனத்தையும் சாலையில் செலுத்தி, பாதுகாப்பாக வண்டி ஓட்டவேண்டியது மிகவும் அவசியம்.

Friday, July 9, 2010

முஸ்லிம்களினது மூளைகளை சலவை செய்யும் யஹூடிகளினது சேர்கியுலரிசத்திட்டத்தினது ஒரு தாக்கம்.

அஸ்ஸலாமு அழைக்கும்,

எமது பாடசாலையின் கல்விநிலையின் வீழ்ச்சிக்கு நிரய்யக்காரனம்கள் உண்டு.
நாம் இன்று YEஹூடி நசாராக்களின் திட்டத்துக்கு எமது முஸ்லிம் பாடசாலைகள் மாட்டிக்கொண்டு உள்ளமை உண்மையில் கவலையாக உள்ளாது அதை எப்படித்தான் தீர்ப்பது ?
கல்வித்திட்டம் : தமிழ் பாடத்தை எடுத்துக்கொண்டால் நிறைய காதல் காவியங்கள் , பாடல்கள், பெண்களை அணு அணுவாக வர்ணித்தல் ., இவைகளை படித்து , மனப்பாடமாக்கினால்தான் O/L பாச் பன்னமுடியும்(இவற்றையெல்லாம் படித்துக்கொடுத்துவிட்டு நமது பிள்ளய்கள் காதல் பண்றாங்களே என்று கண்ணீர்வடிப்பது).
கணிதப்பாடத்தை எடுத்தால் வட்டி. வட்டியினை கணக்கிடுவது.

விஞ்ஜானத்தை எடுத்துக்கொண்டால் மனிதன் குரங்கில் இருந்துவந்தது என்று எழுதினால் தான் வைத்தியர் ஆகமுடியும்( விஞ்சான விளக்கங்கள்)

ஆண்கிலப்பாடத்தை எடுத்தால் backstreetboys , titanic போன்ற பாடல்களை படிக்கவேண்டும்.
இவ்வாறான பல சிக்கல்களில் எமது முஸ்லிம் பாடசாலைகள் மார்க்கத்தைவிட்டும் தவிர்ந்தநிலையில் நமது கல்வியினை தேடிக்கொள்ளவேண்டிய பரிதாப நிலை உருவாகியுள்ளது.

சிலவேளைகளில் மார்க்கமா , கல்வியா என்கின்ற நிலை சூல்நிளைவரும்போது நிரய்யப்பேர் கல்வியினைத்தான் தேர்ந்து எடுப்பதோடு ( ஹசரத் சொல்றமாதிரிஎல்லாம் பார்க்கப்போன இன்றக்கி அவ்வளவுதான் எண்டு கூடசொல்வார்கள்.) ஐயோ லுகர்தொளுகைதான வீட்டுக்குப்போய் பிறகு தொலமுடயும் , என்கிற நிலைகூட உருவாகிஉள்ளது.

***.இன்று எமது பாடசாலைகளில் உள்ள கல்வித்திட்டம்கள் எம்மை இஸ்லாம் என்ற மார்க்கத்தை விட்டு வெளியே தள்ளும் அமைப்பினாலான முறைகளிலேயே அமைந்துள்ளது.

இன்று நாம் குரானுக்கு, தொழுகைக்கு கொடுக்கின்ற முக்கியத்தன்மய்யினை விட கூடுதலான முக்கியத்துவத்தினை இந்த இஸ்லாமியரின் மூளைகளை சலவைசெய்யக்கூடிய இந்த கல்வித்திட்டத்துக்கு கொடுக்கிறோம். அவ்வாறு இல்லை என்றால்

இன்று லுகருக்கு, அசாருக்கு அதான் சொல்லும்போது டியூஷனை விட்டு விட்டு பள்ளிக்கு ஓடவேண்டு., காதல் கதைகள், அதில்வரும் பாடல்களை மனனம் சைய்வதைவிட்டு குராநினை மனனம் சய்யவேண்டும்.

இன்று எல்லாமே தலைகீழாக போய்க்கொண்டு இருக்கிறது .

Thursday, June 17, 2010

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!

திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.
(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)

2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!

ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.
பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.

3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!

உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?
உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.
சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.
திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.
சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.
எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!

திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.
‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.

5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!

உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!

6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!

வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.
ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.
எனவே, மணப் பெண்களே!
உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!

7. அறிந்துகொள்ளுங்கள்!

திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!

திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.

எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!

Wednesday, May 26, 2010

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் - இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு - உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு - போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு - மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

A. பாபிலோனிய நாகரீகம்: பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

B. கிரேக்க நாகரீகம்: பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி 'பெருமைக்குரிய' நாகரீக காலத்தில் - பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். 'பண்டோரா' என்றழைக்கப்பட்ட 'கற்பனைப் பெண்மணி' யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் - ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் - உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் - ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் - பாலியியல் பலாத்காரங்களுக்கும் - பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் - விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

C. ரோமானிய நாகரீகம்:ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் - பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் - ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

D. எகிப்திய நாகரீகம்:எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் - சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

E. அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு - அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.
ஆண்களுக்குரிய 'ஹிஜாப்'
வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் 'ஹிஜாப்' முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ், பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான்.
அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

பெண்களுக்குரிய 'ஹிஜாப்'
அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் (விசுவாசம் கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்... ஆகிய இவர்களைத் தவிர(வேறு ஆண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்:
1. நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் - ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமானவையே.

2. அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

3. அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது - உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

4. அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் - ஆண்கள் - பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5. ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் - பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

6. அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் - கருப்பு நிறம் - போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.


3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் - பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் - இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும்.

ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு - தனது கண்களிலும் - தனது உள்ளத்திலும் - தனது எண்ணத்திலும் - இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது - ஒருவர் நடக்கும் விதத்திலும் - அவர் பேசும் விதத்திலும் - அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

4. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

5. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?.

நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

6. மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது - பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் - பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் - பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் - மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் - சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது - பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் - அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே - பெண்விடுதலை என்கிறார்கள். 'கலை' மற்றும் 'கலாச்சாரம்' என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

7. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் - அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு - 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் 'தீவிரமாக' வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய 'ஹிஜாப்' முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

8. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் - ஐரோப்பாவாக இருக்கட்டும் - அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ - அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் - கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.

Friday, May 7, 2010

இளைஞ்சர்கள், முதியவர்கள் எல்லோரும் டென்ஷன் ஆவது ஏன்?

ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான இன்பங்களையும், துன்பங்களையும் சந்திக்கின்றான். இது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில், நிச்சயமாக கஷ்டத்துடனேதான் இலகு உள்ளது. (அல்குர்ஆன் 94:6)
மேலும் ஓரிடத்தில், நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம் பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)
அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை அவன் சோதிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்)
இவ்வாறு அல்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஏராளமாகச் சொல்லப்பட்டு விட்டது. இவைகளையெல்லாம் அதிகமானோர் பார்ப்பதுமில்லை, சிந்திப்பதுமில்லை. மாறாக எதற்கெடுத்தாலும் வீணான தடுமாற்றம், நிலைகுலைதல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றால் ‘டென்ஷன்’ எனும் நோய்க்குள்ளாகியே தனது வாழ்வில் பாதியை நரகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். பூமியிலோ உங்களிலோ எந்தவோர் துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னர் பதிவேட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும் (அல்குர்ஆன் 57:22)
ஆக ஒரு மனிதன் டென்ஷன் ஆகுவதற்கு முக்கிய காரணம் அவனிடம் உறுதியான ஈமானில்லாததுதான். இதில் அவன் உறுதியாக இருந்தால் எக்கவலையும் படத்தேவையில்லை. அதாவது அவனுடைய உள்ளத்தில் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அடிப்படையான கலிமா ஆழமாக அஸ்திவாரமிடப்பட்டிருக்க வேண்டும். எனவே முதலில் நீங்கள் உங்களை ஒரு நல்ல முஃமினாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளித்தோற்றத்தால் மாத்திரமன்றி உள்தோற்றத்தாலும் (உள்ளம்) பரிசுத்தமாகி உறுதியான ஈமானை நிறைபெறச் செய்வதன் மூலம் ஒவ்வொரு செயலையும் செய்யும் முன் எம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனிடமே முதல் விண்ணப்பத்தைப் போட வேண்டும்.
எந்த நற்காரியமாக இருந்தாலும் அவன் பெயரில் ஆரம்பம் செய்யும்போது எங்களுக்கு எவ்வித சிக்கல்களும் வரப் போவதில்லை. அப்படி ஏதாவது தடங்கல்கள் வந்தாலும் அதிலும் ஏதாவது நன்மை இருக்கும் இது எம்மைப்படைத்தவன் எமது ஈமானைச் சோதிப்பதற்காக வைக்கும் பரிட்சையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் கூட டென்ஷன் ஆகாமல் ஆக வேண்டிய காரியங்களைச் செய்யும் போது சுலபமாக எல்லாமே நிறைவேறிவிடும். இதுப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது, இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்புக்குரியது! அவன் எந்த நிலையில் இருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான் இந்த நற்பேறு வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. (இறை நம்பிக்கையாளனைத் தவிர) அவன் வறுமை, நோய், துன்பம் ஆகிய நிலைகளில் இருந்தால் பொறுமையைக் கைக்கொள்கிறான். செல்வம், செழிப்பான நிலையில் இருக்கும் போது நன்றி செலுத்துகிறான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாய் அமைகின்றது. இந்த விஷயத்தில் தான் எம்மக்கள் பெரும் தவறு செய்கின்றார்கள். எப்படியான முஃமினாக இருந்தாலும் இது விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். இன்பத்தில் நன்றி செலுத்துவதுமில்லை, துன்பத்தில் பொறுமையைக் கைக் கொள்வதுமில்லை. அதற்கும் பாளாய் போன இந்த டென்ஷன்தான் காரணம்.
டென்ஷன் அடிப்படை மையமே இந்த உள்ளம் தான். இது கெட்டு விட்டால் எமது உடலே கெட்டுவிடும். இதனால் இரத்த அழுத்தம், புற்று நோய், சக்கரை வியாதி போன்ற பயங்கரமான வியாதிகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் எனவே இதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ‘திக்ர்’ பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நேரங்களை ஒதுக்கி நாம் திக்ர் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலில் சகல பாக்கியங்களையும் பெறுவதுடன் உள்ளமும் அமைதி பெறும். காலையிலும் மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருப்பீராக என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இப்படி எங்கள் வாழ்க்கையில் எந்த நேரமும் திக்ர் செய்யக் கூடியவர்களாக நாம் மாறிவிட்டால் டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது.
ஒரு வகையான ஷைத்தானின் ஊசலாட்டம் தான் இந்த டென்ஷன் இதற்கு இஸ்லாம் நல்ல வழிமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறது. காலையில் விழித்ததிலிருந்து தூங்கும் வரைக்கும் செய்யும் அனைத்து காரியங்களையும் தூய்மையான எண்ணத்துடன் இறைவனுக்காகச் செய்யும் பொழுது அது நன்மையை பெற்றுத்தரும் காரியமாக மாறுகிறது. எனவே காலை, மாலை துவாக்கள், சாப்பிடும்போது, கழிவறைக்குச் செல்லும்போது, வீட்டைவிட்டு வெளியேறும்போது, தூங்கும்போது போன்ற அனைத்து செயல்களிலும் ஓத வேண்டிய துவாக்களை ஓத வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஒவ்வொரு விநாடியும் எம்மிறைவனை நாம் நினைத்துக் கொண்டேயிருக்கிறோம். அத்துடன் நம்மை அவன் எந்த நிலையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இஹ்ஸான் நிலை எம்மில் ஏற்படுகிறது. இந்திலையில் எவ்விதமான கெட்ட செயல்கள் செய்வதற்கும் நாம் முன்வரமாட்டோம். இதனால் தேவையில்லாத டென்ஷனைவிட்டும் நம்மை நாம் காத்துக் கொள்கிறோம்.
டென்ஷனாவதற்கு அடுத்த முக்கிய காரணம் பேராசையாகும். எம் வாழ்வில் சகல நிலைகளிலும் எமக்கு மேல்மட்டத்திலுள்ளவர்களின் நிலையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இதனால் நம்மை அறியாமலே நாம் அவர்களைப் போலாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. பொறாமையுடனும், கர்வத்துடனுமான வீணான டென்ஷன்தான் வரும். மனிதனுக்கு ஒரு ஓடை நிரம்ப தங்கம் இருந்தாலும் தனக்கு (அது போல்) இரண்டு ஓடைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்தான் நிரப்பும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் அல்குர்ஆனில் பேராசைபற்றி இப்படிக் குறிப்பிடுகிறான். உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)
மேலும் நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை, அதிகமாகத் தேடும் ஆசை உங்களைப் பராக்காக்கிவிட்டது (அல்குர்ஆன் 102:1)
எனவே இவ்வுலக வாழ்க்கை வெறும் சோதனைக்களம்தான் இதில் கூடுதலாக பேராசைப்படாமல் இறைவன் எமக்குத் தந்ததை போதுமாக்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
குடும்பப் பெண்கள் கூடுதலாக இந்த டென்ஷனுக்கு ஆளாகிறார்கள். தங்களது வீட்டு வேலைகளை உரிய நேரத்தில் முடிக்காமல் பிறகு செய்வோம் என்று தள்ளிப் போட்டுவிட்டு தேவையில்லாத சினிமாக்களைப் பார்ப்பதில் நேரத்தை வீணடிக்கிறார்கள். அது மட்டுமல்ல அதில் வருகிற அர்த்தமற்ற அழுகைக்குப் பின்னால் தாமும் உணர்ச்சி வசப்பட்டு அழுது பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள். இந்தக் கண்களால் அல்லாஹ்விற்குப் பிடித்தமாதிரி நல்லதைப் பார்த்து நாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடத்தில் அழுது புலம்பி மன்னிப்புக் கேட்டிருக்கின்றோமா என்றால் இல்லவே இல்லை. இது ஒரு தேவையில்லாத டென்ஷன்தானே.
எனவே உரிய உரிய வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்கும்போது எங்களுக்கு எந்த விதமான டென்ஷனும் வரப் போவதில்லை. அத்துடன் நமக்குக் கூடுதலான நேரமும் மிச்சப்படும். நமக்குக் கிடைக்கும் உடல் ஆரோக்கியமும், ஓய்வான நேரமும்தான் நமக்கு அல்லாஹ் வழங்கிய உண்மையான அருள் என்ற நபிமொழியை மனதில் எடுத்து எமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்பட பழகிக் கொள்வோமேயானால் டென்ஷன் தானாக ஓடிவிடும்.
நான்கு பேருக்கு விருந்து கொடுப்பதாக இருந்தாலும்கூட எம்பெண்களுக்கு டென்ஷன் ஏற்பட்டுவிடும். இது போக விருந்திற்கு வருபவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்துவிட்டாலோ அவர்கள் படும்பாட்டை பார்க்கத் தேவையில்லை. எனவே நாம் அப்படிப் போவதாக இருந்தால் ஒரு போன் செய்து அவர்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.
ரமளான் மாதம் வந்துவிட்டாலே போதும் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் கூடுதலாக டென்ஷாவது வழக்கம் நோன்பு திறப்பதற்கு என்னென்ன வகையான உணவுப் பண்டங்களையெல்லாம் சமைக்க முடியுமோ அதையெல்லாம் சமைத்துக் கொண்டிருப்பது. அந்தந்த நேரத் தொழுகைகளைக்கூட உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில்லை. கடைசி நேரத்தில் டென்ஷனாகிக் கொண்டு லுஹர், அஸர் எல்லாம் சேர்த்து ஒன்றாகவே தொழுவார்கள். கடைசியில் நோன்பு திறப்பதில் கூட அக்கரை செலுத்துவதில்லை. அதான் சொன்ன பிறகுதான் அய்யோ நோன்பு திறக்க வேண்டுமே என்று பதறியடித்துக் கொண்டு நோன்பைத் திறப்பார்கள்.
அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை எடுப்பதில் கூட டென்ஷனாகித் திரிவார்கள். எந்தவகை டிசைனைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் கடைகடையாக ஏறி இறங்கி கடைசியில் வரும் அந்தப் புனிதமான லைலத்துல்கத்ரின் இரவைக்கூட அவர்களால் அடைய முடியாமல் போய்விடுகிறது. எனவே இப்படிபட்ட நிலைமைகளிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் இந்தப் புனிதமான மாதத்தை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் தொழுகையை நிறைவேற்றுவது, சுன்னத்தான தொழுகைகளையும் சேர்த்துக் தொழுவது, அல்குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும் அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை ரமளான் மாதத்திற்கு முதல் வாரமே எடுத்து வைத்துவிட வேண்டும். இப்படி செய்தோமேயானால் நமது உள்ளமும் உடலும் தூய்மையடைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. எந்தவகையான டென்ஷனுக்கும் ஆளாக மாட்டோம்.
மாணவர்களுக்குப் பரீட்சை வந்தாலே முதலில் டென்ஷனாவது பெற்றோர்கள்தான். இது முற்றிலும் தவறானதாகும் எப்பொழுதாவது ஒரு நாள் அந்த வருடத்திற்கான பரீட்சை வரும் என்று எமக்குத் தெரியும்தானே எனவே அதற்குத் தகுந்த மாதிரி எம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும். எல்லாப் படிப்பையும் ஒரே நேரத்தில் படிக்க இருக்காமல், அந்தந்த நாட்களுக்குரிய படிப்பை உடனுக்குடன் படித்து அதில் முக்கியமான விஷயங்களை சிறு குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும் போது நாங்கள் கடைசி நேரத்தில் டென்ஷனாக வேண்டிய தேவையே ஏற்படாது. அத்துடன் மாணவர்கள் தேவையில்லாத இன்டர்நெட் தொடர்பு, டெலிபோன் தொடர்புகளை எல்லாம் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் பெற்றோர்களும் கூடுதலான கவனமெடுக்கத் தவறக்கூடாது.
டென்ஷனாவதற்கு அடுத்த முக்கியமான காரணம் எமக்கு ஏற்படும் மிருகத்தனமான கோபமாகும். இது ஷைத்தானின் குணங்களில் ஒன்றாகும் கோபம் வரும் போது நம்மை அறியாமல் செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்புதான் இப்படிச் செய்துவிட்டோமே என்று யோசிப்பது. கோபம் வரும்போது தன்னை அடக்கி ஆள்பவன்தான் வீரனாவான் ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள் (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்) எனவே கோபம் வரும் போது டென்ஷனாகாமல் அஊதுபில்லாஹி மினஸ்ஷைத்தான்னிர்றஜீம் என்று சொல்லிக் கொண்டால் கோபம் அப்படியே தனிந்துவிடும்.
பணிப்பெண்கள் என்ற போர்வையில் வெளிநாடு வரும் பெண்கள் படும்பாட்டைக் கொஞ்சம் உற்று நோக்குவோமானால் அதுவும் கூட பருவக்கோளாறினால் ஏற்படுகின்ற டென்ஷன் என்றால் அது மிகையாகாது. இதனால் இவர்கள் வேலை செய்யவரும் வீட்டை விட்டு வெளியேறி இங்கு நம்மை கேட்க ஆளில்லைதானே என்று நினைத்துக் கொண்டு தம்பாட்டிற்கு வருபவர் போபவரோடெல்லாம் உறவு பிடித்து தனது கற்பையே பறிகொடுத்துவிட்டு நிற்கெதியாக நிற்கின்றனர். பிறகுதான் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டு வாழ்வதா சாவதா என்ற முடிவிற்கு ஆழாகின்றனர். எனவே இந்த விபச்சாரத்தில் வீழ்ந்து சீரழிந்து போவதைத் தடுப்பதற்குத்தான் இஸ்லாமிய மார்க்கம் பருவ வயதோடு திருமணம் செய்யும்படி பணிக்கிறது. இந்த வகையில் சீதனப்பிரச்சினையும் பெற்றோருக்கு பெரும் டென்ஷனை ஏற்படுத்துகிறது. இதனால்தானே அவர்கள் தம்பிள்ளைகளை வெளிநாட்டிற்கு உழைக்க அனுப்புகிறார்கள். இந்தப் பாவம் சீதனக் கொடுமைக்காரரை சும்மாவிடாது.
நம்மில் பெரும்பாலானவர்கள் கணவரை, பிள்ளைகளை அவரவர் வேலைகளுக்கு வாகனங்களில் அனுப்பிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேவையில்லாமல் டென்ஷனாவது. எங்கே போய் சேர்ந்திருப்பார்களோ அல்லது இடையில் ஏதாவது ஆகியிருக்குமோ என்றெல்லாம் தடுமாறுகிறார்கள் எனவே நாம் அவர்களை அனுப்பும் போது படைத்தவனை நினைத்து அவனுடைய துணையுடன் போய்வரும்படி வழியனுப்ப வேண்டும்.
(மனிதனாகிய) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைப் பாதுகாக்கின்றனர் (அல்குர்ஆன் 13:11).
இந்த திருமறை வசனத்தின் மூலம் தெளிவாகக் கூடியதாக இருக்கிறது. எனவே எம் அனைவரையும் அல்லாஹ் நிச்சயமாக பாதுகாக்கக்கூடியவன் என்ற உறுதியான நம்பிக்கை எம்மில் ஏற்பட வேண்டும்.
ஆக மொத்தத்தில் மனோபாவம்தான் எல்லாவகையான டென்ஷனுக்கும் காரணமாக அமையும். இந்தக் குட்டிக்கதை எமக்கு நல்ல பாடமாக அமைகிறது. ஒரு பாலைவனத்தில் இருவர் ஒட்டகத்தில் போய்க் கொண்டிருந்தனர். சற்றுக் களைப்பு வரவும் இருவரும் ஓர் ஓரமாக சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டனர். திடீரென்று ஒட்டக ஓட்டியை மற்றவர் படாதபாடு படுத்துகிறார். அவரை உருட்டி, பிரட்டி, காலை இழுத்து, தலையை அசைத்து, இப்படிச் செய்யும் போது ஓட்டக ஓட்டிக்குக் கோபம் வந்தது. ஏன் என்னை நீ இந்தப்பாடு படுத்துகிறாய் என்று கேட்டால் நீ கொஞ்சம் சும்மா இரு என்று சொல்லிவிட்டு இவர் வேலையையே பார்த்தார். நீ சற்று நேரம் வாயைத் திறந்து கொண்டே தூங்கிவிட்டாய் உன் வாயில் குட்டிப்பாம்பு சென்றுவிட்டது அதை எடுத்துவிடவே இந்தப்பாடு படுத்தினேன் என்று பாம்பு வாயிலிருந்து வந்தபின் சொன்னார் ஏன் இதை முன்னமே சொல்லக்கூடாதா என்று அவர் கேட்டார் அதற்கு மற்றவர் முன்னமே சொல்லியிருந்தால் நீ டென்ஷனால் செத்தே போயிருப்பாய் என்று கூறினார்.
இது போலத்தான் வைத்தியர்களிலும் சிலர் இருக்கின்றனர். ஒரு நோயாளியைப் பார்த்ததும் உடனே சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அப்படி, இப்படி என்று அவரை டென்ஷனாக்கி விடுகின்றனர். இந்நிலையில் அவரது நோய் இருந்ததைவிடவும் அதிகரிக்கிறது. எனவே முதலில் வைத்தியர்கள் நோயாளிகள் இப்படியான நிலையில் இருந்தாலும் அவர்களை டென்ஷனாக்காமல் ஆறுதலாகவும் அன்பாகவும் எடுத்துச் சொல்லும் போது பாதி நோய் போய்விடும். எனவே இவர்களுடைய பராமரிப்பிலேதான் நோயாளார்கள் கூடுதலாக டென்ஷன் இல்லாமல் மன உறுதியுடன் போராடி குணமடைகின்றனர்.
உன் மனம் உன்னை என்ன நினைக்கிறது என்று நீ உன்னைப்பார் பிறர் என்னை என்ன நினைக்கிறார் என்று நினைக்காதே. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உனக்கு துன்பம் ஏதும் வந்தால் நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என்றெண்ணாதே மாறாக, அல்லாஹ் இதனை விதித்துள்ளான், அவன் விரும்பியதைச் செய்தான் என்று கருது. ஏனெனில் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்றெண்ணுவது ஷைத்தானின் செயற்பாட்டிற்கு வழிதிறந்து விடும் எனவே எது நடந்தாலும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையை எம்மில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மை முஃமின் எந்த நேரமும் ஒரே நிலையில் இருப்பான் துக்கமோ சந்தோஷமோ இறைவன் பக்கம் விட்டுவிட்டு தைரியமாகவும் மனம் சஞ்சலப்படாமலும் மறுமையை நோக்கியதாகவே அவனுடைய பயணம் இருக்கும்.
ஆனால் வரவிருக்கும் இந்த மறுமையைப் பற்றி பெரும்பாலானவர்கள் சிந்திப்பதுமில்லை டென்ஷனாவதுமில்லை அந்த மஹ்ஷரில்தான் இப்படிப்பட்டவர்கள் போய் நின்று கொண்டு டென்ஷனாவார்கள் போலும் அங்கே போய் நின்று டென்ஷனாகி என்ன பயன் ஒன்றுமே ஆகப்போவதில்லை. நீயே ஒரு டென்ஷன் என்று அவன் நரகிலே வீசப்படுவான். எனவே உண்மை உள்ளம் கொண்ட மனிதர்களாக டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடம் வைக்காமல் எம் வாழ்க்கையை அல்குர்ஆன், ஹதீது பிரகாரம் அமைத்துக் கொண்டு சுபீட்சமாக, சுகமாக வாழ்ந்து இறையடி சேர எங்கள் அனைவருக்கும் அந்த வல்லோன் துணை புரியட்டும்.